“கல்லூரி பிரிவு!” என்ற கண்டக்டரின் தெறித்த வார்த்தைகளோடு பஸ் நின்றது. என்னை போன்றே பற்பல கனவுகளுடன் ஒரு பட்டாளமே இறங்கியது.

இரு புறமும் மரங்கள் சில்லென்ற காற்றோடு அசைந்து அசைந்து இசைபாடி என்னை மட்டும் புன்னகையுடன் வரவேற்பதாய் எண்ணி மனதோடு மகிழ்ந்தேன். அழகழகாய் பெண்கள் செல்வதை கண்கள் பார்க்க மறுக்கவில்லை. இதுவரை எனக்கு தோழி என்று எவருமில்லை. ஏனென்றால் நான் படித்த பள்ளியில் என்னுடைய வகுப்பில் மாணவர்கள் மட்டுமே இருந்தது தான் இதன் காரணமாகக் கருதினேன். சற்று கூச்ச சுபாவம் வேறு.

முதல் நாள் கல்லூரிக்கு செல்கிறேன். அப்பொழுது ஒரு பதற்றதுடன் தான் இருந்தேன். காரணம், “வேறென்ன, சீனியர் ரேகிங் தான்”. அந்த பயத்தோடு தான் கல்லூரி நோக்கி கூட்டத்தோடு கூட்டமாய் நடந்தேன். ரேகிங் பயத்தோடு போன எனக்கு பல வியப்புகள் காத்திருக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. “ரேகிங் என்பது என்ன?” என்று அங்கே கேட்டாலும் பதில் கிடைப்பது கடினம். ஆம் சீனியர்ஸ் எங்களை சக தோழர்களாகவே எண்ணி பழகினார்கள். மனதிற்கு சந்தோஷமாக தான் இருந்தது.

கோபிசெட்டிபாளையம், அழகான, பசுமையான ஊர். எவராயிருப்பினும் மரியாதை தரும் குணம் கொண்ட சிறு பிள்ளையிடமும் பணிவாக பேசும் மக்கள், நீர் வற்றாத கால்வாய்கள், பசுமை நிறைந்த வயல்கள், மாசுபடாத சுத்தமான காற்று, தித்திக்கும் குடிநீர்... இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல், சுருக்கமாக பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸில் சேர்ந்திருந்தேன். பிறந்து வளர்ந்த குடியாத்தத்திலிருந்து வந்து வெகு தொலைவிலிருக்கும் இக்கல்லூரியில் படிப்பதால், கல்லூரி விடுதியில் சேர்ந்தேன். அன்று விடுதியில் காலை உணவு முடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பினேன். இத்தனை நாட்களாய் தனித்து இருந்துவிட்டேன் இனியும் அப்படி இருக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டே கல்லூரியை நோக்கி நடந்தேன். பழக்கமில்லாத இடம் என்பதால் அனைத்து கட்டிடத்தையும் தேடி அலைந்து ஒரு வழியாக வகுப்பறையை கண்டுபிடித்து சென்றமர்ந்தேன். அருகில் அமர்ந்திருக்கும் வருங்கால நண்பனிடம் பேசவும் சிறுது தயக்கம் இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் நான் பேசும் தமிழை அவர்கள் வேடிக்கையாய் தான் பார்த்தார்கள். என்னுடைய கோபங்களால் வெறுப்பை மட்டுமே சம்பளமாய் சேகரித்து கல்லாய் இருந்த என்னை சிறிது சிறிதாய் செதுக்கிச் சிற்பமாய் மாற்ற போகும் நண்பர்கள் இவர்கள் தான் என்று அப்போது நான் அறியவில்லை.

அருகில் இருக்கும் ஒருவனுடன் பேசவே தயங்கியவன் உடன் பயிலும் மாணவிகளிடமா பேசப் போகிறேன்? எப்போதும் இருப்பது போல, “தான் உண்டு தன் வேலையுண்டு” என்றே இருந்தேன். உடன் பயிலும் மாணவர்களின் பழக்கத்தாலும் நெருக்கத்தாலும் என்னுள் தோன்றும் மாற்றங்களையும் நட்பு என்னும் குறிஞ்சி மலர்கள் மலர்வதையும் நான் நன்கு உணர்ந்தேன். காலங்கள் உருண்டோடியது. முதன் முதலில் கல்லூரிக்கு வந்த நினைவுகளோடு நான்காவது செமஸ்டரும் ஆரம்பமானது. தயக்கமும் கூச்சமும் மேலோங்கி இருந்ததால் அது நாள் வரை ஒரு பெண்ணிடமும் பேசவில்லை. தோழிகள் என்று சொல்லிக்கொள்ளும்படி யாரும் இல்லை.

உணவு இடைவேளைக்கான சங்கொலி காதிற்கு எட்டியது. கால்கள் விடுதியை நோக்கி பயணிக்கத் துவங்கிய மறு நிமிடமே ஒரு பெண்ணின் குரல் என்னை அழைத்து நிறுத்தியது. அட அது வேறு யாருமில்லை என்னோட க்ளாஸ் மேட் சுபஸ்ரீ தான். கல்லூரியில் முதன் முதலாய் என்னை அழைத்த பெண். “என்ன?” என்று நானும் கேட்டேன். “உன்னிடம் தனியாக பேச வேண்டும்” என்றாள். என்ன இது வில்லங்கம் என்று எண்ணிக்கொண்டே “சொல்லுங்க…” என்றேன். “நான் உன்னை பர்ஸ்ட் செமஸ்டர்ல இருந்து வாட்ச் பண்ணிட்டே தான் இருக்கேன். உனக்கு என்ன பிரச்சினை? பசங்க கூட அவ்ளோ ஜாலியா கிண்டலடிச்சி பேசுற, ஆனா எங்களையெல்லாம் ஏன்னு கூட கண்டுக்க மாட்டேன்ற?” இப்படியெல்லாம் அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற எனக்குத் தெரியவில்லை. “கூச்சமாக இருக்குது” என்று ஒரு பெண்ணிடம் சொன்னால் என்னை ஏளனமாய் பார்ப்பாள். என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்தேன். “சரி எனக்கு டைம் ஆச்சு இத பத்தி நாம சாயுங்காலம் காலேஜ் முடிஞ்சதும் பேசலாம்” என்று சொல்லி அக்கணம் தப்பித்த எண்ணத்துடன் விடுதிக்குச் சென்றேன். எப்பொழுதும் போல அன்று என்னால் சாப்பிட முடியாமல் அறைகுறையாய் சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்குச் சென்றேன். வழக்கம் போலவே அன்றும் நல்லபடியாகவே கல்லூரி முடிந்தது. சுபஸ்ரீயும் எனக்காகவே காத்திருந்தாள். என்னிடம் வந்து “சரி வா போகலாம், காலேஜ் பிரிவு வரை என்னுடன் வா பிறகு நீ ஹாஸ்டலுக்கு திரும்பி போய்க்கோ…” என்று சொன்னாள். பூம் பூம் மாடு மாதிரி தான் இருந்தது என் நிலைமை.

இப்போது கல்லூரி பிரிவை நோக்கி ஒரு பயணம். எந்தன் வாழ்க்கையின் மாற்றங்கள் அக்கணம் துவங்குவதாய் எனக்கு அப்போது தோன்றவில்லை.

“ம்… சொல்லு, ஏன் இப்படி இருக்க? உனக்கு எதாவது ப்ராப்ளமா?” என்று ஆரம்பித்தாள். “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நான் இதுவரையில் எந்த பெண்ணிடமும் பழகியதில்லை. என் வாழ்க்கைல இருக்குற ஒரே பெண் என் அம்மா மட்டும் தான். நான் படித்தது பாய்ஸ் க்ளாஸ்ல. எனக்கு சிஸ்டர்ஸ் யாரும் இல்லை. பிரதர்ஸ் மட்டும் தான். ஒரு பெண்ணிடம் எப்படி பேசணும் பழகணும் எதுவும் தெரியாது. அந்த தயக்கம் ப்ளஸ் நான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். ஸோ, பெண்களிடம் பேச எப்பவுமே கொஞ்சம் கூச்சம் தான். இப்பகூட உங்ககிட்ட பேச கொஞ்சம் தயக்கமா தான் இருக்கு. உங்களுக்கே இது புரியுதுனு நெனைக்கிறேன்.” என்று ஒரு வழியாய் படபடப்புடன் பேசி முடித்தேன்.

மீண்டும் அவள் ஆரம்பித்தாள் “நான் ஒன்னு சொல்லட்டா? எனக்கு மரியாதை கொடுத்து மூணாவது மனுசியா ட்ரீட் பண்ணாத. நீ சொன்னத நீயே கொஞ்சம் யோசிச்சி பாரு. நீ ஆண் பெண் அப்படினு பிரிச்சி பாக்குற. ஆனா என்ன பாரு நான் நம்ம க்ளாஸ்ல எல்லாரு கூடவும் நல்லா பேசுறேன் பழகுறேன். ஏன் தெரியுமா? எனக்கு உன்ன மாதிரி இப்படி பிரிச்சி பாக்க தெரியாது. எனக்கு தெரிஞ்சதெல்லாம் ப்ரெண்ட்ஸ்... ப்ரெண்ட்ஸ்... ப்ரெண்ட்ஸ்... நீயும் அப்படி நெனச்சி பாரு, உன் ப்ரெண்ட்ஸ் சர்க்கிள் பெரிசாகும். புரியுதா?”

“ம்... புரியுது.” என்றேன்.

“டேய் நாம இன்னும் 18 மாசம் தான் ஒன்னா படிப்போம். அது முடிச்சதும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மூலைல இருப்போம். அப்ப நீ, அடடா! நாம காலேஜ் லைஃப் மிஸ் பண்ணிட்டோமேன்னு நெனச்சிட கூடாது. அதுக்காகத் தான் நான் உங்கிட்டே பேசணும்னு தனியா கூப்பிட்டேன். சரி காலேஜ் பிரிவு வந்தாச்சி. நான் கெளம்பறேன். நாளைல இருந்து, சாரி இன்னைல இருந்து, இப்பத்திலிருந்து உன்னோட ப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல ஒரு ப்ரெண்டா என்னை சேர்த்துக்கோ. ம்... கெளம்பறத்துக்கு முன்னாடி ஒரு பஞ்ச் டயலாக். லைஃப் ஈஸ் வெரி ஷார்ட், சிம்பிள் அண்டு க்யூட் மேக் இட் பிரைட்டர் பார் எவர். நான் வரேன்.” என்று சொல்லிவிட்டுச் சென்றவள் மீண்டும் “டேய்... நில்றா டேய்...” என்று அலறிக்கொண்டே அருகில் வந்தவள் “ம்... அப்புறம் இன்னொரு விஷயம். நாளை மதியம் நீ என்னோடு லஞ்ச் கேன்டீன்ல சாப்பிடுர சரியா? என் கூட நாளைக்கு என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் சாப்பிடு வாங்க. அவங்க கூட நல்லா பேசு, பழகு, என்ன நான் சொல்றது?” என்று கேட்டுவிட்டு எப்பொழுதும் போல் பூம் பூம் மாடு மாதிரி நான் தலையை ஆட்டியதும் டாட்டா சொல்லிவிட்டு பஸ் ஸ்டாப்பிற்குச் சென்றாள்.

அன்று இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. எனக்கு அக்கணம் ஒன்று மட்டும் மனதில் தோன்றியது. “நான் ஸ்கூல் லைஃபை மிஸ் பண்ணிட்டேன். இனிமேலும் அந்த தப்ப பண்ணக்கூடாது. காலேஜ் லைஃப்பில் மீதி இருக்குற 18 மாதத்தின் ஒவ்வொரு நாளும் அனைவருக்கும் மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும்” என்று எண்ணிக்கொண்டேன்.

மறுநாள் சூரியன் எனக்காக புதியதாய் விழித்திருந்தான். உணவு இடைவேளைக்காக சங்கு ஒலிப்பதை நான் எதிர்பார்த்து காத்திருந்தேன். சங்கு எப்போதும் போல் அன்றும் தன் கடமையை சரியாக செய்தது. அக்கணம் முதல் எந்தன் தோழர்களுடன் தோழிகளின் எண்ணிக்கையும் கூடியது. கேன்டீனில் அனைத்து தோழிகளும் என்னை சுற்றி தேவதைகளாய்!

0 comments:

Post a Comment